கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ) 12.1.C

குழந்தைகளுக்கான  இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (ஆர்.டி.இ) சட்டம், 2009 பிரிவு 12 (1) (c) இன்படி அனைத்து தனியார் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை (எல்.கே.ஜி. மற்றும் 1 ஆம் வகுப்பு) குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு சேர்க்கை செய்யப்படுகிறது.

இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம் அல்லது கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ), ஆகஸ்ட் 4, 2009 அன்று இயற்றப்பட்ட இந்திய நாடாளுமன்றத்தின் ஒரு சட்டமாகும்,

இது 6 முதல் 14 வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தின் முறைகளை விவரிக்கிறது. 

கல்வி உரிமைச் சட்டம்(ஆர்.டி.இ)தனியார் பள்ளிகளில் பின்தங்கிய பிரிவு , நலிவடைந்த (Weaker Section ) பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு நுழைவு நிலை(எல்.கே.ஜி மற்றும் வகுப்பு 1)  வகுப்புகளில் இருந்து 8 வகுப்பு வரை குறைந்தபட்சம் 25% இடங்களை ஒதுக்க படுகிறது.  6 முதல் 14 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தையின் கல்வியையும் ஒரு அடிப்படை உரிமையாக மாற்றுகிறது. 

கல்வி உரிமைச் சட்டம்(ஆர்.டி.இ) அரசால் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளுக்கு பொருந்தாது , மேலும் நன்கொடை மற்றும்  குழந்தை அல்லது பெற்றோர்களுக்கு நேர்காணல் இல்லாமல் சேர்க்கை செய்ய வழிவகுக்கிறது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் பொருளாதார அல்லது குழந்தைகளின் இயலாமை நிலையைப் பொருட்படுத்தாமல் தரமான மற்றும் சமமான தொடக்கக் கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதே கல்வி உரிமைச் சட்டத்தின்(ஆர்.டி.இ) முக்கிய நோக்கமாகும்.

கல்வி ஆண்டுகாலி இடங்கள்சேர்க்கைகள்நிரப்பு விகிதம்
2018-191,27,13763,30949%
2019-201,24,35073,50459%
2020-211,15,70870,80161%
2021-221,08,97856,16651%

தமிழ்நாட்டை பொறுத்தவரை, மொத்தமுள்ள 8437 தனியார் பள்ளிகளில் 1.08 லட்சம்  காலி இடங்கள் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் இருந்தும் கடந்த கல்வியாண்டிற்கான(2021-22) சேர்க்கயில் வெறும் 51 சதவிகித இடங்கள் மட்டுமே கல்வி உரிமைச்சட்டம்(ஆர்.டி.இ) மூலம் நிரப்பப்பட்டுள்ளது.

1.நலிவடைந்த பிரிவு:

ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும்  குறைவாக உள்ள அனைத்து  பிரிவினரும்  நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம். 

2.பிற்படுத்தப்பட்ட பிரிவின் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட குழந்தைகள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

அ). பின்தங்கிய வகுப்பு (BC)

ஆ). மிகவும் பின்தங்கிய வகுப்பு (MBC)

இ). பட்டியல் பழங்குடியினர் (ST)

ஈ). பட்டியல் இனத்தவர்கள்(SC)

3.பின்தங்கிய பிரிவு-சிறப்பு வகை கீழ் விண்ணப்பிக்கப்பட்ட குழந்தைகள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்

1.அனாதை குழந்தைகள்

2.எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைகள்

3.திருநங்கைகள்

4.துப்புரவு தொழிலாளர்கள் குழந்தை

5.மாற்றுத்திறனாளி குழந்தை

கல்வி உரிமை சட்டம்(ஆர்.டி.இ)  மூலம் 3 முதல் 4 வயதுடைய குழந்தைகள் LKG வகுப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பங்கள் மற்றும் சேர்க்கை செயல்முறைகள் அரசால் நடத்தப்படுகிறது 

விண்ணப்பத்தை ஆன்லைனில் செலுத்துவதற்கு மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பிரிவை சேர்ந்த குழந்தையாக இருக்க வேண்டும். 

அக்கம்பக்கத்தில் ( வீட்டு முகவரியில் இருந்து 1 கிமீ சுற்றளவில்) உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே விண்ணப்பங்களை செலுத்த முடியும் . 

ஒரு குழந்தை குறைந்தது 1 பள்ளி முதல்அதிகபட்சம் 5 பள்ளி வரை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம் .

கல்வி உரிமைச்சட்டம்(ஆர்.டி.இ) மூலம் இலவசக்கல்வியில் குழந்தையை சேர்க்க விண்ணப்பம் செலுத்தும் பொது கீழ்காணும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அ ). குழந்தையின் பிறப்பு சான்று 

ஆ ). வருமான சான்று 

இ ). சாதி சான்று 

ஈ ). இருப்பிட சான்று 

மேல்குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணம் இல்லையென்றாலும் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்குவதற்கு முன்னதாக  விரைவாக விண்ணப்பித்து தயார்நிலையில் வைத்திருக்கவேண்டும் 

முகவரி சான்று:

01.04.2013 தேதியிட்ட பள்ளி கல்வித் துறையின் G.O 60 இன் படி. , வசிப்பிடத்தை நிரூபிக்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரி ஆதாரங்களில் ஏதேனும் ஒன்றை பதிவேற்ற வேண்டும்.

1.குடும்ப அட்டை

2.வாக்காளர் அட்டை 

  1. ஆதார் அட்டை 

4.ஓட்டுநர் உரிமம்

  1. வங்கி கணக்கு புத்தகம் 

6.தொலைபேசி பில்

7.பான் அட்டை

8.VAO வழங்கிய குடியிருப்பு சான்றிதழ்

9.மாநில அரசு / மத்திய அரசு / பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை.

பின்தங்கிய வகுப்பு (BC ,MBC)-துணை வட்டாச்சியர், வருவாய் துறை தமிழ்நாடு அரசு .

பட்டியல் இனத்தவர்கள்(SC)- வட்டாச்சியர், வருவாய் துறை தமிழ்நாடு அரசு .

பட்டியல் பழங்குடியினர் (ST)- RDO (வருவாய் பிரிவு அதிகாரி)/ துணை ஆட்சியர், வருவாய் துறை தமிழ்நாடு அரசு.

வருமான சான்றிதழ் – வட்டாச்சியர், வருவாய் துறை தமிழ்நாடு அரசு.

அனாதை குழந்தை சான்று -மாவட்ட சமூக நல அலுவலர், சமூக நலத்துறை மற்றும் சத்தான உணவு திட்டம் .

HIV பாதிக்கப்பட்ட குழந்தை சான்று– தமிழ்நாடு அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அதிகாரி.

துப்புரவு பணியாளர் குழந்தைக்கான சான்று– அந்தந்த கார்பொரேஷன்கள், நகராட்சிகள், டவுன் பஞ்சாயத்துகளின் நிர்வாக அதிகாரி  மற்றும் அந்தந்த கிராம பஞ்சாயத்து தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட தகுதிவாய்ந்த அதிகாரசபை .

மாற்று திறனாளி குழந்தைக்கான சான்று -மாவட்ட மாற்று திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர் 

விண்ணப்ப தேதி முடிந்த பிறகு , விண்ணப்பங்கள் அரசால் சரிபார்க்கப்பட்டு, சரியான தகவல்களோடு விண்ணப்பித்த குழந்தைகளின் விண்ணப்பங்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ( பின்தங்கி சிறப்பு பிரிவு குழந்தைகள் -குலுக்கல் முறைக்கு முன்பாக விண்ணப்பித்த பள்ளிகளில் சேர்க்கை அளிக்கப்படும் ). 

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் பெயர்கள் அந்தந்த பள்ளிகளின் தகவல் பலகையில் எழுதப்படும். பெற்றோர்கள் இதன்  மூலம் தங்கள் குழந்தைக்கு எந்த பள்ளியில் சேர்க்கை கிடைத்துள்ளது என தெரிந்து கொண்டு , குழந்தையை குறிப்பிட்ட காலக்கெடுக்குள் பள்ளியில் சேர்க்க வேண்டும்.